சொரையாஸிஸ் நோயால் உலகில் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது நோய்க்கு நிவாரணம் தேடும் முயற்சியாக ஆங்கில மருத்துவ முறைகளை நாடுகின்றனர். ஆனால், இந்த சொரையாஸிஸ் நோயை ஆயுர்வேத, சித்த, பாரம்பரிய மருத்துவ முறைகளால் மட்டுமே மாற்ற முடியும் என்பது இவர்களில் பலருக்குத் தெரிவதில்லை என்று கூறுகின்றார் ஆயர்வேத விஷேட மருத்துவ நிபுணரான டாக்டர் கலாவெவ என். நபீஸ்தீன்.

சொரையாஸிஸ்  சம்பந்தமான அவரின் கருத்துக்களை  வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.

இறைவனின் அதி உன்னத படைப்பு மனிதன். அந்த மனிதனுக்கு வழங்கப்பட்ட அழகான மிகச் சிறந்த ஆடை தோலாகும். இந்த தோலுக்குக் கெடுதலையும், அழகைக் கெடுக்கும் தன்மையைக் கொடுக்கும் நோய்களின் வரிசையில் சொரையாஸிஸ்  (Psoriasis) எனும் (காளாஞ்சகப்படை) செதில் உதிரல் நோய் முன்னிலையில் உள்ளது.

மனிதர்களை தாக்கும் தோல் நோய்களில் தொழு நோய்க்கு அடுத்த படியாக மிக கொடிய நோயாக காணப்படுகிறது. இந்த நோயின் ஆரம்ப நிலையில் தலையில் பொடுகு போலவும் தோலில் செதில் செதில்களாகவும் தோல் உதிரத் தொடங்கும்.

தலையில் வெண்மை நிறத்தில் இது உதிர்வதால் இதனைப் பொடுகு என்று கவனக் குறைவாக இருப்பவர்களே அதிகமாக உள்ளனர். இதுவும் பார்வைக்கு வெண்குஷ்டம் போல் இருந்தாலும்  இந்தக் கவனக் குறைவால் இது உடல் முழுவதும் பரவி தோல் உதிர்ந்த இடங்களில் எல்லாம் சிறு சிறு புள்ளியாக இரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

ஆயர்வேத மருத்துவ முறையில் இந்நோயை கிடிப என்ற சொற்களைக் கொண்டும், இந் நோய் உள்ளவர்களின் தோல் மீனின் செதில் போன்று படை படையாக களருவதனால் சிங்களத்தில் இதை பொது கபர என்றும் அழைப்பர். பொதுவாக உடலின் முதுகுப் பகுதி, கைகளின் பின் பக்கம், கால்களின் முன் பக்கம் மற்றும் தலை போன்ற இடங்களில் தான் இன் நோயின் பாதிப்புக்கள் அதிகமாகத் தென்படும்.
காரணம்

உலகெங்கும் பரவலாக ஏற்படும் இந் நோய் பற்றிய சரியான தகவல்கள் தெரியாத நிலையில் அவை அச்சங்களும், சந்தேகங்களும்,  வீண் குழப்பங்களும், பயமும் ஏற்படவும், தவரான அணுகுமுறைகளுக்கும் வழிவகுத்துவிடுகின்றன.

சொரையாஸிஸ் என்ற இந்த வியாதியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கிறார்கள். பலருடைய திருமணம் கூட தடைப்பட்டிருப்பதுடன் மண வாழ்க்கை கூட முறிந்திருக்கிறது.

பரம்பரை

சொரையாஸிஸ் ஒரு பரம்பரை வியாதியா? என்றால் அது ஓரளவுக்கு உண்மைதான். கணவன் – மனைவி இருவருக்கும் இந்த நோய் காணப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு நோய் வர ஐம்பது வீதம் சாத்தியம் இருக்கிறது.

விஷம்

உடம்பில் ஏதேனும் விஷம் தங்குவதனாலும் அல்லது உணவு ஒவ்வாமை காரணமாகவும் பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுவதாகக் கூறும் பாரம்பரிய ஆயர்வேதம்; சொரையாஸிஸ் நோயும் இவ்வாருதான் ஏற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றது.

காயங்கள்

ஏற்கனவே சொரையாஸிஸ் நோயாளி ஒருவருக்கு தோலில் எங்கேனும் காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் நோய் தோன்றவும் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

இரசாயன பாதிப்புக்கள், காயங்கள் மூலமான அழற்சி என்பவையும் நோயை அதிகப்படுத்தும் என்பதனால் அரிப்பைக் குறைக்கும் மருந்து வகைகளைப் பாவிப்பதும் தோலை மென்மையாக வைத்திருக்கும் எண்ணெய்களை தடவுவதாலும், சிறு காயங்களை தவிர்ப்பதால் சொரையாஸிஸ் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

நோய்க் கிருமிகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் பொட்டு சொரையாஸிஸ் சாதாரணமாக சளியை, இருமலை ஏற்படுத்தும் பக்டீரியாக்களினால் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆக தொற்று நோய்க் கிருமிகளுக்கு வைத்தியம் செய்வதனால் குழந்தை சொரையாஸிஸ் குணமாகின்றது.

ஹோர்மோன்கள்

சில வகை சொரையாஸிஸ்  பெண்கள் கருத்தரிக்கும் போது சற்று குணமடைந்து விடுகின்றது. சிலவகை சொரையாஸிஸ் மிக தீவிரமாக மோசமடைந்து விடுவதனால் இந் நோய்க்கு ஹோர்மோன்கனின் பங்கும் உள்ளது என அறியப்படுகின்றது.

எதிர்ப்புச் சக்தி

சொரையாஸிஸ் நோய் முற்றிலும் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியில் உள்ள குறைபாட்டினால் ஏற்படுகின்றது என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே போல் இரத்தத்தில் கல்சியம் குறைவு ஏற்பட்டாலும் இந் நோய் ஏற்படுகின்றது என மேலும் ஓர் நவின ஆய்வு தெரிவிக்கின்றது.

மன அழுத்தம்

90 சதவீத சொரையாஸிஸ்  நோயாளிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதுவே வியாதியை அதிகப்படுத்தக் காரணமயிருக்கின்றதாம். ஆகவே நோயாளிகள் மிகவும் அமைதியாகவும் தெளிவான மனநிலை கொள்தலும் அவசியம். மகிழ்ச்சியாக இருப்பதுடன் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவம் கூட இந்நோய் கன்ம வினையினாலும் மனோ விகாரங்களினாலுமே ஏற்படுகிறது என்கிறது.

பாதிப்புக்கள்

  1. சிறிய மற்றும் பெரிய முட்டுக்களில் வலியும், வீக்கமும் தோன்றும்.
  2. கை, கால்களில் படை களருதல் அவ் இடங்களில் சிறு புண்கள் தோன்றி இரத்தக் கசிவு ஏற்படல்.
  3. நகத்தில் துளைவு ஏற்படல், பழுதடைதல்.
  4. நகம் மஞ்சல் நிறமடையும், உடையும்
  5. தோல் கடினமாதல், விகாரமடைதல்.
  6. முடி பாதிப்படைதல்

சிலருக்கு சொரையாஸிஸ் சுகமாகும் வேளை அஜீரணம், வயிற்றுவலி போன்ற நோய் அறிகுறிகளும் தோன்றும். மீண்டும் நோய் ஆரம்பிக்கும் போது வயிற்று வலி இல்லாமல் போகும்.

எது எவ்வாறு இருப்பினும் சொரையாஸிஸ்  குதப்பகுதி, யோனி, மர்ம உறுப்புக்கள், மூட்டுப் பகுதிகளில் அதிகமாக ஏற்படுவதனால் இந் நோயை சிலர் சமூக நோயோ என்று அச்சப்படுகின்றனர்.

அதனால் நோய் எதுவென்று உறுதி செய்வதற்கு இரத்தப் பரிசோதனை செய்வது சிறந்தது.
இந் நோயாளியின்  உணவு முறைகள் பற்றிய ஆயர்வேத கருத்துப்படி: மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சிவப்பு மீன் வகைகள், மதுபானம் என்பவற்றை நோயாளி விலக்கிக் கொள்ள வேண்டும். பழ வகைகள், கீரைகள் வகைகளும், பச்சைக் காய்கறிகளும் உகந்தன. காலை மாலை சூரிய ஒளி மற்றும் குளிர் நீர்க் குளியல் என்பன நோயாளிக்கு ஆரோக்கியம் தரும்.